கலைஞர்

இந்த பிரபஞ்சம் மிகவும் விசித்திரமானது. சில நேரங்களில் அது பேரன்பின் இயக்கம். சில நேரங்களில் அது இரக்கமற்ற நிகழ்வுகளின் கூட்டியக்கம். ஒவ்வொரு உயிரின் தோற்றத்திலும் பேரன்பை அது வெளிப்படுத்தி, அதன் இரக்கமற்ற முரணை ஒவ்வொரு உயிரின் மறைவிலும் வெளிப்படுத்துகிறது. ஆனால் அந்த இரக்கமின்மையும் பேரன்பின் நீட்சியாகவே இருப்பதால், கலைஞர் எனும் மகத்தான ஆளுமையை, 95 ஆண்டு காலம் தன்னுள் வாழ வைத்திருக்கிறது. பிரபஞ்சத்துக்கும் தெரிந்திருக்கிறது, எவெரெல்லாம் 95 ஆண்டு காலம் வாழ வேண்டுமென்று.


கருத்தியல் ரீதியாக அவருடைய சிந்தனைகளோடும், அரசியல் ரீதியாக அவருடைய செயல்பாடுகளோடும் முரண்படுபவர்கள் இருக்கலாம். ஆனால் அவருடைய ஆளுமையோடு முரண்படுபவர்கள் மிக சிலரே. கம்யூனிஸ, மார்க்சிய அரசியல் சிந்தனைகளாகட்டும்….இருத்தலியல், ஆத்திகம், நாத்திகம் என எவ்வித தத்துவ சித்தாந்தங்களாகட்டும்….அதனை ஒரே ஆளுமை அரை நூற்றாண்டுகளாக முன்னெடுத்து சென்ற வரலாற்று செய்திகள் மிகவும் குறைவே. ஆனால் அதனை கலைஞர் மிகவும் சுலபமாக செய்து வரலாறு ஆகியிருக்கிறார். தமிழகத்தின் வரலாறை கலைஞருக்கு முன், கலைஞருக்குப் பின் என வரிசைப்படுத்துவது மிகையாகாது. கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக திராவிட சித்தாந்தத்தை தனி மனிதனாக முன்னெடுத்து சென்றிருக்கிறார்.சாதிய அடிப்படைவாதத்தில் ஊறி திளைத்திருந்த சமுதாயத்தில் சம உரிமைக்காகப் போராடி, நவீன சிந்தனைகளை தனது எழுத்தாற்றல் மூலம் மிக வீரியமாக மக்களின் மனத்தில் விதைத்த சிந்தனையாளர்.

ஆட்சியாளர்களுக்கு தத்துவ நோக்கு இருக்க வேண்டும் என கிரேக்க தத்துவவாதி ப்ளாட்டோவின் உரை உண்டு. கலைஞர் தத்துவவாதி மட்டுமல்ல…இலக்கியவாதி, அரசியல்வாதி, போராளி எனப் பன்முகத் தன்மை கொண்டவர். கலை, இலக்கியம், அரசியல் எனப் பல துறைகளில் அவர் தொட்ட உச்சங்கள் ஏராளம். சுயமரியாதை பள்ளியில் பயின்று, அதனை தன் வாழ்நாள் முழுவதும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பயிற்றுவித்தார். மாநில சுயாட்சி, மொழி உரிமை, சமத்துவம், பெண்கள் உரிமையென ஒரு தீர்க்கதரிசியாக, கொள்கைவாதியாக வாழ்ந்து மறைந்திருக்கிறார். 

மனித இனத்தின் அறியப்பட்ட வரலாற்றில், காலமும் வெளியும் பிரபஞ்ச விதிகளுக்குட்பட்டு விளையாடுகிற விளையாட்டு மிகவும் சூட்சமமானது. ஹிட்லர், காந்தி, ஸ்டாலின், சர்ச்சில், லிங்கன், மார்டின் லூதர் கிங், சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ இன்னும் பல அரசியல் சித்தாந்திகள் மனித இனத்தின் போக்கை முன்னெடுத்து சென்றிருக்கிறார்கள். அவர்களின் இருப்பை பிரபஞ்சம் ஏதேனும் ஒரு வகையில் உறுதி செய்து கொண்டேயிருக்கும். கலைஞரின் இருப்பும் அவ்வாறே. 

அவர் மீண்டும் வருவார். பல யுகங்களின் ஒரு யுகத்தில் நூறாண்டுகளை வாழத் தெரிந்தவருக்கு, பல யுகங்களின்  பல யுகங்களில் பல நூறாண்டுகளை வாழத் தெரியாதா என்ன? அவர் மீண்டும் வருவார்.

Advertisements

உதிர்ந்த இறகு

பூமியின் நிழல்

கிரகணமாய் சந்திரனை மறைத்த இரவொன்றில்

பசியினால் எரியும்

அடிவயிற்றின் நெருப்பு

கண்கள் வழியே

குருதி சிகப்பாய்

யாமத்தின் இருளை எரிக்க

இரை தேடி வருகிறது

நூற்றாண்டுகளாய் வாழும் மிருகமொன்று

கண்களின் சிகப்பை

காடு முழுக்க நிரப்பியது அந்த மிருகம்

அந்த மிருகத்தின்

காலடியில் எரிகிற நிலம்

தான் தாங்கியிருக்கும்

மரங்களை எரிக்கிறது

மரங்களில் உறங்கும்

பறவைகள் எரிகின்றன

அவை துயில் கலைந்து

வானத்தில் பறந்து

மேகங்களை எரிக்கின்றன

வானம் எரிகிறது

நிலம் எரிகிறது

நீர் எரிகிறது

இரவு எரிகிறது

சிகப்பு இரவு! சிகப்பு இரவு!

குருதி இரவு! குருதிஇரவு!

குருதி குழம்பாய்

உறைந்து கிடந்தது தடாகம்

மேகத்தை எரித்த பறவையொன்றின்

உதிர்ந்த இறகு

காற்றில் கீழிறங்கி

தடாகத்தை தொட்ட அந்த நொடியில்

பூமியின் நிழலிருந்து

வெளி வந்தது சந்திரன்

இரவு அணைந்தது

நிலம் அணைந்தது

நீர் அணைந்தது

வானம் அணைந்தது

மிருகம் அணைந்தது

பேரிருளின் பெரு நெருப்பை அணைக்க

உதிர்ந்த இறகு போதுமாகிறது!

ஒரு புல்லின் நுணியில்

ஒரு புல்லின் நுணியிலிருந்து விடுபடும் நீர்த்துளிப் போல தவிக்கிறது மனம். உருண்டோடி வந்து நுணியிலிருந்து விழும் வினாடியில், தன்னுடைய பாரத்தை மட்டுமல்ல, அந்த புல்லிலையின் சுமையையும் சேர்த்தே இழுக்கும் நீர்த்துளி விடுதலையாகிறது. அந்த சுமையை இழுக்க முடியாத நீர்த்துளியை, புல் மீண்டும் இழுத்து கொள்கிறது. மனமும் வாழ்வின் சுமைகளை இழுத்துக் கொண்டு அலைகிறது, நுணியைத் தேடி.

நிகழ்வுகளில் கரைகிறோம். நிகழ்வுகளால் கரைகிறோம். நிகழ்வுகளோடு கரைகிறோம். நிகழ்வுகளினூடே கரைகிறோம்.

கரைதலும் விடுதலும் ஒன்றா?

கரைந்து விடவா?விட்டுக் கரையவா?

கரைதலும் விடுதலும் கடப்பதற்கா? எவற்றை கடக்கிறோம்?எவற்றிற்காக கடக்கிறோம்?

துளி விழுமுன் புல் சிறியது…நிலம் பெரியது. விழுந்த பின், நிலம் சிறியது…பிரபஞ்சம் பெரியது.பிரபஞ்சத்தில் விழுந்த பின், எது சிறியது? எது பெரியது?

மனம் புல்லின் நுணியில் தான் இருக்கிறது. விழுவதும் இருப்பதும் புல்லின் சுமையைப் பொருத்து

எதனை எழுதுவது?

எழுத்து என்னுடைய அனுபவங்களின் நீட்சியாக, நினைவுகளின் தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டே சென்று ஒரு புள்ளியில் நின்று விடுகிறது. அந்த புள்ளியில் அது முழுமை அடைந்தால், முற்றுப்பெற்று விட்டால் யாதொரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அங்கு தான் அது ஆரம்பிக்கிறது என்பது தான் பிரச்சனையே. அந்த புள்ளிக்கு மேல் எந்த நினைவும், எந்த அனுபவமும் எனக்கு உதவுவதில்லை. அந்த புள்ளிக்கு அப்பால் அனைத்தும் சூன்யம். அங்கு எல்லாமும் இருந்து எதுவும் இல்லாமல் இருக்கிறது. பால்வெளியில் மனிதனின் பார்வைக்கு அப்பால் இருந்து இல்லாமல் இருக்கும் நட்சத்திரங்களைப் போல.

ஆதி மனிதனின் சிந்தனைகளை எல்லாம் சுமந்து அலையும் எழுத்துக்கள், சாக்ரடீஸ் முதல் ரஸ்ஸல் வரையிலும்,ஷெல்லி முதல் பாரதி வரையிலும், ஷேக்ஸ்பியர் முதல் தாஸ்தவ்ஸ்யகி வரையிலும் தத்துவமாக, கவிதையாக, கதைகளாக, அரசியலாக பல வடிவங்களாக உருப் பெற்று, உரு மாறி வளர்ந்து நிற்கிறது. இத்தனை உருவம் பெற்ற இதனை வைத்து எதனை எழுதுவது? இதனால் யாருக்கு எந்த பயன் தான் இருந்து விடப் போகிறது? கோடி கோடியாய் எழுதியாகி விட்டது. எத்தனை இஸங்கள் எழுத்துக்களால் பிறந்திருக்கின்றன. இறந்திருக்கின்றன. என்ன தான் மாறி விடப் போகிறது? மேடையில் வாங்கும் பட்டங்களைத் தவிர. எதற்கு எழுத வேண்டும்? எதனை எழுத வேண்டும்?

இரவுகளின் சாட்சி

5259506-mota_ru_2082718

எத்தனை இரவுகள்!!!
யுகம் யுகமாய் சென்றிருக்கின்றன
யுகம் யுகமாய் காத்திருக்கின்றன
கல் தோன்றி மண் தோன்றிய காலத்திலிருந்து

எத்தனை நிலவுகள்!!!
யுகம் யுகமாய் பிறந்திருக்கின்றன
யுகம் யுகமாய் இறந்திருக்கின்றன

முன்னிரவுகளுக்கும்
யாமங்களுக்கும்
பின்னிரவுகளுக்கும்
இருளின் கருமை மட்டுமல்ல
நிலவின் வெண்மையும் சாட்சியாக இருந்திருக்கின்றன

நீலியும் சூலியும் வாழும் அத்துவானக் காடுகள்
மாடனும் காடனும் வாழும் மனற்பரப்புகள்
அய்யனாரும் கருப்பனாரும் வாழும் ஊர் எல்லைகள்
மோகினியும் காட்டேரியும் வாழும் படித்துறைகள்

இரவுகள் உடல்களை மட்டுமல்ல
ஆன்மாக்களையும் சுமந்து திரிகின்றன

அவை
ஆதி இரவின்
நிலமும் நீரும் வானும் காற்றும் நெருப்பும்
அந்தத்திலும் மாறதிருக்குமென
சாட்சி சொல்கின்றன

இல்லாமல் போவது
புணர்வுகளும்
பிறப்புகளும் இறப்புகளும்
உயிர்களும் உடல்களும்
செடிகளும் மரங்களும்
மொழிகளும் உணர்வுகளுமென
சாட்சி சொல்கின்றன

அந்த இரவு
செந்நாய் ஒன்று
கண்கள் சிவந்து செறுமித் திரிய
காலத்தின் வெளியில்
நித்தியமான இரவாக இருக்குமென
சொல்லி செல்கின்றன