பேயாளும் சாக்காடு

கடந்த 2 தினங்களாக, தமிழ் நாட்டில் அதிகம் பேசப்படும் விஷயம் சசிகலா முதலமைச்சர் ஆவது பற்றித்தான்.எல்லோருக்கும் ஒரு கருத்து. எல்லோருக்கும் ஒரு யூகம்.அரைகுறை செய்தி ஊடகங்களிலிருந்து(இதில் முக்கியமானவை இணைய ஊடகங்கள்) தான் இதுவரை படித்த உலக அரசியல், உள்ளூர் அரசியல் செய்திகள் என எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்து விட்டுக் கொண்டிருக்கின்றனர்.இப்படித்தான் அன்டார்டிக்காவின் பக்கத்தில் இருக்கும் ஒர் தீவின் அதிபர் இறந்து போன போது, என்று மெண்பொருள் துறையில் வேலை பார்க்கும் மது(இவனுடைய இயற்பெயர் மதன். இப்பொழுது சுருக்கி அது மதுவாகியிருக்கிறது) ஆரம்பிக்கும் போது, நான் ஒரு முழ கயிறை தேட வேண்டியிருக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நாட்டை காந்தியும் யேசுவும் ஆண்டது போலவும், இப்பொழுது இந்த அம்மையாரால் தான் குடி முழுகிப் போக போவது போலவும் நமது புரட்சியாளர்கள் எல்லாம் கொக்கரிக்கிறார்கள். முழுகிப் போன குடி இன்னும் கொஞ்சம் ஆழமாக முழுகப் போகிறது. ஆனால் முழுகினது என்னவோ முழுகினதுதான்.

5000 ரூபாய் சம்பளத்துக்கு நாம் வேலைக்கு எடுக்கும் ஒரு வீட்டுப் பணியாளைக் கூட, முன்புலம் பின்புலம் எல்லாம் தெரிந்து வேலைக்குச் சேர்க்கும் நாம், நம்முடைய சட்டமன்ற தொகுதி வேட்பாளரை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறோம். அவரைப் பற்றி நமக்கு என்ன தெரிகிறது. சென்னை மாநகரத்தின் பிரதான வீதிகளில், உலகம் வியக்க ஒரு திருமணத்தை நடத்தி, நகைகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்களாய் வலம் வந்தவர்களில் ஒருவரை மன்னித்து விட்டு இன்னொருவரை மன்னிக்காதது ஏன்?சென்னையையே புரட்டிப் போட்ட வெள்ளத்தின் போது ஸ்டிக்கர் ஒட்றாங்க, ஸ்டிக்கர் ஒட்றாங்க என்று கூப்பாடு போட்டு விட்டு அப்புறமாக ஓட்டையும் போட்டு விட்டு, இப்போது குத்துதே குடையுதே என்றால்,இது வேலியில் போன ஓனானை எடுத்து வேட்டிக்குள் இல்லை, வீட்டுக்குள் விட்ட கதை.

அட..சென்னைக்கு வெளியே உள்ள மக்கள் தானே ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தார்கள் என்று பேசும் சென்னை கணவாண்களே…தமிழ் நாட்டிலேயே குறைந்த ஓட்டுக்கள் பதிவானது சென்னையில் தான். எல்லோரும் அம்மா உணவகத்தில் இட்லி மாவு அரைத்துக் கொண்டிருந்தீர்களோ என்னவோ. சென்னைக்கு வெளியே உள்ள மற்ற கணவாண்கள் இன்னும் ஒரு படி மேலே. ஊரே பற்றி எரிந்தாலும் பரவாயில்லை, தனக்கு பிடில் வாசிக்க 200 ரூபாய் போதும் என்று ஓட்டை விற்று விட்டு இன்று நியாயம் பேசுகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக எந்த ஒரு ஆட்சியும் ஆறுகளைக் காப்பாற்றவில்லை..விவசாயத்தில் அக்கறை காட்டவில்லை..கல்வியை அரசுடமையாக்கவில்லை..வாழ்வாதாரத்தைப் பெருக்கவில்லை. இதையெல்லாம் யோசிக்காமல், ஓட்டை மட்டும் மாறி மாறி விற்று விட்டு, இன்றைக்குப் புரட்சி போராட்டம் என்றெல்லாம் வேதாந்தம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

நமது தலைவன் நம்மிலிருந்து தான் உருவாகிறான். அவன் இந்த சமூகத்திற்கு வெளியிலிருந்து வருவதில்லை. மனிதர்கள் தனது சுயநல தேவைகளுக்காக ஒரு தலைவனை உருவாக்குகிறார்கள். அவன் அந்த சமூகத்தின் பொதுப்படையான தன்மைகளையும் குணங்களையும் கொண்டே வளருகிறான். அவன் சொர்க்கத்தில் இருந்து நேரே வருவதில்லை. மக்கள் வழியிலேயே இன்று தலைவனும் இருக்கிறான்.மக்களால் நான், மக்களுக்காக நான் என்பதிலேயே அதன் முழு அர்த்தமும் இருக்கிறது. மக்களாகிய நானும், நீங்களும் தன்னளவில் மாறாமல், இங்கு எதுவும் மாறாது.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனிமனித பொறுப்பும் சமூக பொறுப்பும் இருக்கிறது. ஆனால் நம்மால் சமூகத்தைப் பற்றி சிந்திக்க முடியுமா, நான் என்ற எண்ணத்திலிருந்து வெளியே வர முடியுமா என்பது சந்தேகமே. சமூக கட்டமைப்பு என்பதே அரசியல், மத காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு போலியான தத்துவமோ என்ற ஐயம் எழத்தான் செய்கிறது. தன்னுணர்வு மிகவும் அதிகமாகி விட்ட இந்த சமூக ஊடக காலங்களில், சமூகம் என்ற அமைப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்குப் பிறகு இந்த சமூகத்திற்கான தலைவனையோ தலைவியையோ தேர்வு செய்யலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s