சூரியன் ஆம்பளைன்னு யார் சார் சொன்னா?

1

அந்த கிழக்கு பார்த்த பழைய பள்ளிக்கூடத்தின் நுழைவு வாசலை தாண்டியவுடன் பெரிய வெளி. அந்த வெளியில் சிதறி அடித்தது போல ஒழுங்கே இல்லாமல் வேம்பும், பலாவும், முருங்கையும், புளியமரமும் வளர்ந்து முக்கால் பகுதியை மூடி இருந்தன. அந்த வெளிதான் அந்த பள்ளிக்கான விளையாட்டு மைதானமும், காலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கான இடமுமாக இருந்தது. பல நேரங்களில் அந்த மரங்களின் கீழேதான் வகுப்புகள் நடக்கும்.அந்த வெளியைத் தாண்டி இடமிருந்து வலமாய் நீண்ட வரிசையான ஓடு வேய்ந்த வகுப்பறைகள்.சுவரெல்லாம் ஈரம் ஏறிக் காய்ந்து ஓவியங்களாய் பதிந்து கிடந்தன.இடது ஓரத்தில் இருந்த ஐந்தாம் வகுப்பறையில் அமர்ந்திருந்த சூரியன், ஜன்னல் கம்பிகளால் வெட்டப்பட்டு கோடு கோடாய் வகுப்பறையின் தரையில் விழுந்து கிடந்த சூரியக் கதிர்களை எண்ணிக் கொண்டிருந்தாள். அதே நேரத்தில், சூரியப்பிரகாசம் உள்ளே நுழையவும், இவள் சூரியக் கோடுகளை எண்ணிக் கொன்டிருந்த கவனத்தில், ஆசிரியர் நுழைந்ததை கவனிக்க மறந்து எழாமல் இருந்து விட்டாள். அது அந்த பள்ளியில் அவருடைய முதல் நாள், முதல் வகுப்பு.அவருடைய வருகையை கவனிக்காமல் இருந்த சூரியனைப் பார்த்ததும் அவருக்கு கடும் கோபம் வந்தது.

“என்ன கண்ணு தெரியலயா.இல்ல காது ரெண்டும் கேட்கலயா? வாத்தியார் வந்து நிக்கிறது கூட தெரியல” என்று கத்தினார்.

நடுக்கத்துடன் எழுந்த சூரியன், என்ன காரணம் சொல்வதென்று தெரியாமல் விழித்தபடி நின்றாள்.

“உன் பேர் என்ன?” என்று கேட்டபடி வருகைப் பதிவேட்டை நோட்டம் விட்டார் சூரியப்பிரகாசம்

“சூரியன்”

“சூரியனா? ஆம்பளைப் பிள்ளைக்கு வைக்க வேண்டிய பேர எந்த முட்டாப்பய உனக்கு வச்சது?”

இந்த கேள்வி அவளுக்குப் புதிதல்ல. அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்த கேலியைக் கேட்டு கேட்டு அவளுக்கு எவரேனும் இப்பொழுது இந்த கேள்வியைக் கேட்டால் பெரும் கோபம் வந்து விடுகிறது. கோபம் உச்சிக்கு ஏற,

“சூரியன் ஆம்பளைன்னு யார் சார் சொன்னா?” என்று கேட்டு விட்டாள். பிறகு தான் உரைத்தது. தான் பேசிய விதமும், தன்னுடைய கேள்வியின் பொருளும் நேரடியாகவே ஆசிரியரை அவமானப்படுத்துவது போல இருந்ததென்பது. மாணவர்களும் களுக்கென்று சிரித்து விட்டனர். சூரியப்பிரகாசத்துக்கு வந்தது கோபம். அவருக்குத் தன் பெயர் மேல் ஒரு கர்வம் உண்டு. இப்பொழுது சூரியனுடைய கேள்வி, நேரடியாகவே அவரது கர்வத்துக்கு சவால் விட்டது. மாணவர்களின் சிரிப்பு வேறு அந்த கோபத்துக்கு தூபம் போட்டது.

“இந்த பேர உனக்கு வைத்த புத்திசாலியை நான் உடனே பார்க்கனும். அழைச்சிகிட்டு வா” என்று அவளை வகுப்பை விட்டு வெளியே அனுப்பி விட்டார். அதை நினைத்து அவர் மனதுக்குள் கறுவிக் கொண்டே இருந்தார். தன் பெயர் ஒரு பெண்ணுடைய பெயராகவும் இருந்தது அவருக்கு ஏற்புடையதாக இல்லை. வகுப்பெடுக்கவும் முடியவில்லை. தலைமை ஆசிரியரிடம் உடல் நிலை சரியில்லை என்று சொல்லி விட்டு வீட்டுக்குப் புறப்பட்டார்.

2

வீட்டுக்கு வந்த பிறகும் கூட சூரியப்பிரகாசத்துக்கு கோபம் அடங்கவில்லை. அந்த கேள்வி அவருடைய இருப்பையே வீழ்த்திவிட்டது போல உணர்ந்தார். அது தன்னுடைய ஆன்மைக்கே விடப்பட்ட சவால் என எண்ணி எண்ணிக் கொதித்தார். சாப்பாட்டைத் தூக்கி எறிந்தார். பொருட்களைத் தூக்கிப் போட்டு உடைத்தார். அவருடைய மகளும் மணைவியும் அருகில் வரவே பயப்பட்டனர். அவருக்குப் பெண்களைப் பற்றிய ஒரு பொது அபிப்பிராயம் உண்டு. பெண்கள் ஆண்களை சார்ந்தே இருக்க வேண்டும் என ஆழமாக நம்பினார்.இன்று வகுப்பில் நடந்த அந்த சம்பவம் அவரை சிதைத்திருந்தது. அப்பொழுது, சூரியன் தன்னுடைய அப்பாவுடன் வந்தாள்.

“மன்னிக்கனும் ஸார். உங்களைத் தேடி ஸ்கூலுக்குப் போயிருந்தேன். நீங்க இங்க இருப்பதாக சொன்னாங்க. அதுதான் எங்க அப்பாவ கூட்டிக்கிடு இங்கேயே வந்துட்டேன்” என்று சொல்லியபடி தன் அப்பாவை கையைப் பிடித்து அவரிடம் அழைத்து வந்து நிறுத்தினாள்.

“வணக்கம் சார். என் பெயர் குமரகுருபரன்” என்று சூரியனின் அப்பா அவரிடம் கையை நீட்ட, அப்பொழுது தான் சூரியப்பிரகாசம் கவனித்து,

“வணக்கம்…உங்களுக்கு…உங்களுக்கு கண் தெரியாதோ” என்று வார்த்தைகள் தடுமாற கேட்டார்.

“ஆமாம் சார். நான் ஒரு பிறவிக்குருடன். வெளிச்சம் என்பதை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை”

இந்த பதில் சூரியப்பிரகாசத்தை நிலை தடுமாற செய்தது. சுதாரித்துக் கொண்டு,

“வருத்தப்பட வேண்டிய விஷயம். ஆனால் உங்கள் பெண் இன்று பேசியது மிகவும் தவறு. அவளுக்கு சூரியன் என்று பெயர் வைத்த்து நீங்கள்தானா?”

“அவள் என்னிடம் எல்லாம் சொன்னாள் சார். அவளுக்கு சூரியன் என்று பெயர் வைத்தது நான் தான். அவள் பேசிய விதம் தவறு தான். ஆனால் அதன் பொருளில் எந்த தவறும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை”

இதனை குமரகுருபரன் சொன்னவுடன், சூரியப்பிரகாசத்துக்கு வந்ததே கோபம். அதுவரை அவர் கண் தெரியாதவர் என்பதால் ஏற்பட்ட இரக்கம் எல்லாம் பின்னுக்குச் சென்று விட்டது.

“ஓஹோ…ஆசிரியருக்கே பாடம் எடுக்கும் அளவுக்கு புத்திசாலியோ. அவள் பெயர் காரணம் என்ன?”

“ஸார்..நான் ஒரு பிறவிக்குருடன். ஆனாலும் சூரியனைப் பார்க்க வேண்டும், உணர வேண்டும் என்ற ஆசை எனக்கிருந்தது. நானும் எல்லோரிடமும் கேட்டேன். சூரியன் எப்படி இருக்குமென்று. ஒருத்தர் கூறியதற்கு ஒத்தாக மற்றொருவர் கூறவில்லை. சூரியன் சிகப்பென்றும், வெள்ளையென்றும், ஆரஞ்சென்றும், வட்டமென்றும், கண்களால் பார்க்கவே முடியாதென்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறினர். ஆனால் எனக்கோ சூரியனை உணர்ந்து விட வேண்டுமன்ற ஆசை. அதனால் எனக்குப் பிறந்த மகளுக்கு சூரியன் என்று பெயரிட்டு, தினம் அவளைத் தொட்டுணர்ந்து, சூரியனை உணர்ந்து கொண்டிருக்கும் மகிழ்ச்சியில் இருக்கிறேன்” என்றார் குமரகுருபரன்.

“அது சரி..ஆனால் சூரியன் ஒரு ஆண். அவன் வெய்யோன்.பரிதி.நெருப்பு பிழம்பு. ஆயிரம் கரங்களை உடையவன்.ஆதவன். இரவி. கதிரவன் என்றுதானே சொல்கிறோம். கதிரவள் என்று சொல்வதில்லையே. ஒரு ஆணுக்கான குணங்களை உடையவனின் பெயரை உன் பெண்ணுக்கு வைத்து அவனுடைய ஆண்மையை நீ கேலி செய்து விட்டாய்” என்றார் சூரியப்பிர்காசம்.

“நீங்கள் சொல்வதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும், ஆயிரம் கைகள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி, ஞாயிறு என்பது பெண்ணாக என்றெல்லாம் சூரியனைப் பெண்ணாக உருவகிக்கும் எழுத்துக்களும் உண்டு. சூரியனை கடவுள் என்கிறோம். கடவுள் பால்நிலை கடந்தவன் இல்லையா?” என்றார் குமரகுருபரன்.

சூரியப்பிரகாசத்திற்கு கோபத்தில் நரம்புகள் புடைத்து விட்டன. அங்கேயே குமரகுருபரனை எரித்து விட வேண்டும் போல துடித்தது மனது. இவருக்குத் தான் யார் என்பதை புரிய வைத்து விட வேண்டும், சூரியன் ஆண் என்பதையும் நிரூபித்து விட வேண்டும் என்று முடிவு செய்து, ஒரு வாரம் கழித்து அவரை மறுபடியும் தனது வீட்டிற்கு வரச் சொல்லி அனுப்பினார். அதற்குள் இந்த விஷயம் ஊர் முழுக்கப் பரவி விட்டது. ஊரே இரு அணியாகப் பிரிந்தது. சூரியன் ஆணா? பெண்ணா? என்ற விவாதத்திற்கு நாள் குறிக்கப்பட்டது.

3

இந்த ஒரு வாரத்தில் சூரியப்பிரகாசம் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டார்.தமிழ் இலக்கியத்தில் சூரியன், உலக இலக்கியத்தில் சூரியன், ஆன்மீகத்தில் சூரியன் என சூரியன் ஆண் என நிரூபிப்பதற்கான மேற்கோள்கள், அந்த கருத்தை வழிமொழிய அவருக்குத் தெரிந்த மக்கள் என சபை தயாரகியது. விவாத நாளும் வந்தது. அன்றைய தினம் வழக்கத்திற்கு மாறாக சூரியன் சுட்டெரித்தது. விவாதம் தொடங்கியது. ராகுவும் கேதுவும் ஆண் என்பதாலும், அவர்கள் சூரியனைப் பிடித்து கிரகணம் உண்டாக்குவதால் சூரியன் பெண்ணாகவே இருக்க முடியும் என ஒரு கூட்டமும், சூரியன் ஆணாக இருந்ததால் தான் குந்திக்கு கர்ணன் பிறந்தான் என ஒரு கூட்டமுமாக விவாதம் களை கட்டியது. சிறுவர்களுக்கெல்லாம் பள்ளி விடுமுறை. அன்றைய தினம் ஒரு திருவிழா நாள் போல ஊரே அல்லோலகல்லோலப்பட்டது.விவாதமும் முடிந்தபாடில்லை. இரு அணியினருமே தர்க்கத்தில் சரிசமமாக போய்க் கொண்டிருந்தனர்.வெளியில் யாருமே இல்லை. மொத்த ஊரும் இரு அணியாக சூரியப்பிரகாசத்தின் வீட்டில் திரண்டு இருந்தது.

அப்பொழுதுதான் அது நடந்தது. சூரியப்பிரகாசத்தின் கொல்லையில் இருந்த வைக்கோல், சூரியனின் அதீதமான வெப்பத்தால் பற்றிக் கொண்டு எரிந்தது. தீ விறு விறுவென பரவியது. மொத்த ஊரும் ஒரே இடத்தில் திரண்டு இருந்ததால், அவர்களால் உடனடியாக தீயையை அணைக்க முடியவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் பரவிய தீ, மொத்த ஊரையும் எரித்து சாம்பலாக்கி காற்றில் கலந்து விட்டது.

உருவமில்லாமல், அருவமில்லாமல்……..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s