கவிதைகள்

நீ இல்லாத ஓர் இரவில்….

நீ இல்லாத அந்த இரவின்
நடு சாமத்தில்
என் படுக்கையில்
எண்ணிலடங்கா பாம்புகள் ஊற ஆரம்பித்தன

புழுக்களைப் போல்
அவை மிக சிறியதாக இருந்தன

மெது மெதுவாக என்னைச் சுற்றி வளைத்து
என் படுக்கையோடு என்னைக் கட்டிப் போட்டன

என் படுக்கையின் ஈரத்தை
அப்போது தான் நான் உணர்ந்தேன்

அந்த ஈரம்…
என் காது மடல்களை
நீ உன் நாவால் வருடியபோது
உண்டாகியிருக்கலாம்

அல்லது

என் உடலெங்கும்
நீ எச்சில் படுத்தியபோது
உண்டாகியிருக்கலாம்

அல்லது

உன் நெற்றியில் விழுந்திருந்த
கற்றை முடியிலிருந்து வழிந்து
என் இதழ்களை நனைத்து
உன் மார்பகங்களுக்கு நடுவில்
என் முகத்தை பிரதிபலித்து
உன் தொடையின் வழியே
உருண்டோடிய வியர்வைத் துளிகளால்
உண்டாகியிருக்கலாம்

அப்போது
மெது மெதுவாக
உன் முனகல் சத்தமும்
காதோர கிசுகிசுப்புகளும்
அந்த இரவின் மவுனத்தை கிழித்து
ஒரு பெருங்குரலெடுத்து
அலறலானது

தப்பித்து சென்று
புத்தகத்தை எடுத்தேன்
அச்சிலிருந்த எழுத்துக்கள்
சிதறி விழ ஆரம்பித்தன

பின்…
வெற்றுப் பக்கங்களி ல்
உன் முகம் தெரிய ஆரம்பித்தது
உன் வாசம் வீச ஆரம்பித்தது

ஓடிச் சென்று கடற்கரையில் நின்றேன்
நுரைத்த அலைகளின் பேரிரைச்சலும்
ஈரமான கடற்கரை மணலும்
கடலின் பரப்பில் ஒளிர்ந்த நிலவொளியும்
கலவியின் இன்பத்தை
என்னிடம் பேச ஆரம்பித்தன…..

Advertisements