புனைவுகள்

On Education

https://swarajyamag.com/ideas/no-more-macaulay-putras-please-why-we-need-scores-of-dharmic-education-boards

Advertisements

இரவுகளின் சாட்சி

5259506-mota_ru_2082718

எத்தனை இரவுகள்!!!
யுகம் யுகமாய் சென்றிருக்கின்றன
யுகம் யுகமாய் காத்திருக்கின்றன
கல் தோன்றி மண் தோன்றிய காலத்திலிருந்து

எத்தனை நிலவுகள்!!!
யுகம் யுகமாய் பிறந்திருக்கின்றன
யுகம் யுகமாய் இறந்திருக்கின்றன

முன்னிரவுகளுக்கும்
யாமங்களுக்கும்
பின்னிரவுகளுக்கும்
இருளின் கருமை மட்டுமல்ல
நிலவின் வெண்மையும் சாட்சியாக இருந்திருக்கின்றன

நீலியும் சூலியும் வாழும் அத்துவானக் காடுகள்
மாடனும் காடனும் வாழும் மனற்பரப்புகள்
அய்யனாரும் கருப்பனாரும் வாழும் ஊர் எல்லைகள்
மோகினியும் காட்டேரியும் வாழும் படித்துறைகள்

இரவுகள் உடல்களை மட்டுமல்ல
ஆன்மாக்களையும் சுமந்து திரிகின்றன

அவை
ஆதி இரவின்
நிலமும் நீரும் வானும் காற்றும் நெருப்பும்
அந்தத்திலும் மாறதிருக்குமென
சாட்சி சொல்கின்றன

இல்லாமல் போவது
புணர்வுகளும்
பிறப்புகளும் இறப்புகளும்
உயிர்களும் உடல்களும்
செடிகளும் மரங்களும்
மொழிகளும் உணர்வுகளுமென
சாட்சி சொல்கின்றன

அந்த இரவு
செந்நாய் ஒன்று
கண்கள் சிவந்து செறுமித் திரிய
காலத்தின் வெளியில்
நித்தியமான இரவாக இருக்குமென
சொல்லி செல்கின்றன

புலன்களின் வார்த்தைகள்

வார்த்தைகளைத் திருடிக் கொண்டு
உன்னைப் பற்றி எழுதச் சொல்கிறாய்

வார்த்தைகளைத் திருடிய போதே
என்னை அறிவற்றவனாய் நிரூபிப்பது
எளிதென்று நினைத்து விட்டாய்

ஆனால்,

உன்
தோலின் நிறத்தை
வியர்வையின் வாசத்தை
எச்சிலின் சுவையை
ஸ்பரிசத்தின் வருடலை
தொடைகளின் வெப்பத்தை
புணர்வின் ஆழத்தை
இரவுகளின் பேரமைதியை

நான் மறக்கும் வரையில்
என்னை அறிவற்றவனாய்
உன்னால் நிரூபிக்கவே முடிவதில்லை

அலைகளாய் உடையும் கனவுகள்

தன் சுய பிம்பத்தை
நீரில் பார்த்து
கொத்துகிறது பறவை

அலைகளாய் சிதறிச் செல்லும்
பிம்பங்கள்
மறுபடியும் கூடுகின்றன

இரவு வரை
கொத்திக் கொண்டேயிருக்கும்
பறவை
பிம்பத்தை அழித்து விட்ட
களிப்பில் பறந்து செல்கிறது

அதற்குப் புரியவில்லை
பிம்பத்தை அழித்தது இருள் என்று

அதற்குப் புரிவதேயில்லை
பிம்பத்தை அழித்தது இருள் என்று

நானும்
பறவையைப் போல
உடைத்துக் கொண்டே இருக்கிறேன்

என் வாழ்வின் கனவுகளை

அலை அலையாய்
உடைந்து செல்லும் கனவுகள்
என் மரணம் வரையில்
கூடிக் கொண்டே இருக்கின்றன

வாழ்வின் அதிக நேரங்களை
கனவுகளை சிதைப்பதிலேயே
கரைத்து விடுகிறேன்

பின்
இருளில் கரைந்து விடுகிறேன்