அரசியலின் முகங்கள்

நினைவுகளின் அறையிலிருந்து தூசு தட்டிப் பார்க்கிறேன். பெயர் தெரியாத ஏதோவொரு படத்தில் விவேக்கின் நகைச்சுவை ஒன்று உண்டு. சாலையில் அவர்களிடமிருந்து பொருளைத் திருடிப் போகும் ஒருவனை விவேக்கின் நண்பர் துரத்த, அவரைத் தடுக்கும் விவேக் “வேணாம்..அவனத் துரத்தாத.நாளைக்கி அவனே காவல் துறை மந்திரியாக வந்தாலும் வருவான்” என்று கூறி விட்டு “பாரத சமுதாயம் வாழ்கவே..வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே” என்று பாடிக் கொண்டு போவார்.

இன்றைய தமிழகத்தின் அரசியல் முகம் இதுதான். எங்கள் ஏரியாவில் நடைபாதையில் காய்கறி கடை வைத்திருப்பவர் ஒரு பெரிய கட்சியின் வட்ட நிர்வாகியாக இருக்கிறார். காய்கறி கடை வைத்திருப்பவர் அரசியலில் பொறுப்பு வகிப்பது சரியா தவறா என்பது வேறு விவாதம். அனுமதி இல்லாமல் நடைபாதையில் காய்கறி கடை வைத்திருப்பவர், அவருடைய அயராத(???) அரசியல் பணியால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் எங்கள் தொகுதியில் வேட்பாளராகி வெற்றி பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். வட்ட நிர்வாகியாகவே சட்டங்களை உடைக்கிறவர், சட்டமன்ற உறுப்பினாரானால் எதையெல்லம் உடைப்பாரோ? இது எங்கள் தொகுதியில் மட்டுமல்ல. இன்றைக்கு இது மாநிலப் பிரச்சனை. அரசியலின் இன்றைய முகங்கள் எல்லாம் காய்கறி வியாபாரிகளாக, ஷேர் ஆட்டோ டிரைவர்களாக சட்டத்தை உடைத்துக் கொண்டிருந்தவர்கள் தான். இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர்களாக முன்னாலும் பின்னாலும் வண்டி வைத்துக் கொண்டு பவனி வருகின்றனர். உறுப்பினர்களாக அவர்கள் இருக்கும் இந்த 5 ஆண்டுகளில் பணம் சம்பாதித்து விடுவார்கள்.பணம் வந்தால் மரியாதையும் தானகவே வந்து நிரந்தர அரசியல்வாதி ஆகி விடுவார்கள்.

சாமனியன் பதவி வகிப்பதைப் பற்றி எந்த பிரச்சனையும் இல்லை. காமராஜரே சிறந்த உதாரணம். அவர் ஏட்டுக் கல்வி பயிலவில்லை. ஆனால் அவருடைய பின்புலம் ஸ்திரமானது. அவர் சுதந்திர போராட்ட இயக்கங்களால் கட்டமைக்கப்பட்டவர். இந்திய சுதந்திரம் என்ற கொள்கைக்காக களத்தில் போராடியவர். மரபினால் அறிவாக்கம் செய்யப்பட்டவர். அவரோடு இன்றைய சாமனியர்களை ஒப்பிடுவது மிகவும் தவறானது.

இன்றைய சாமனிய அரசியல்வாதி சிந்திக்கத் தெரியாதவன். அவனுக்குத் தெரிந்தது வியாபாரம். காய்கறியோ, பழக்கடையோ..அவனுக்குத் தெரிந்தது ஒவ்வொரு நாளும் சரக்கெடுப்பது… அதை அழுக விடாமல் அன்றைக்கே விற்றுத் தீர்ப்பது. இதற்கு மேல் அவர்கள் பழகவில்லை. பொருளாதார சமூக சிந்தனைகளோ, தொலைநோக்குப் பார்வையோ, ஆன்மீக தத்துவ விசாரனைகளோ அற்றவர்கள். வியாபாரிகள். பழக்கடை போல, காய்கறி கடை போல அரசியல் அவர்களுக்கு இன்னொரு தொழில். பணம் சம்பாதிக்கும் தொழில். பதவியில் இருக்கும் போதே ஆள் பலமும், பண பலமும் சேர்ந்து விடுகிறது.

இவர்களை தலைவர்களாக ஏற்றுக் கொண்டு இயங்குகிறது இந்த சமூகம். ஒரு சமூகத்தை வழி நடத்துபவர்கள், எவ்வித சிந்திக்கும் திறனுமின்றி தன்னளவிலே தவறு செய்பவர்களாக இருக்கின்றனர். மக்களும் அவ்வாறே..அரசியல் விடிவு என்பது யுகம் தாண்டிய கனவாகவே இருக்கிறது.

Advertisements

பேயாளும் சாக்காடு

கடந்த 2 தினங்களாக, தமிழ் நாட்டில் அதிகம் பேசப்படும் விஷயம் சசிகலா முதலமைச்சர் ஆவது பற்றித்தான்.எல்லோருக்கும் ஒரு கருத்து. எல்லோருக்கும் ஒரு யூகம்.அரைகுறை செய்தி ஊடகங்களிலிருந்து(இதில் முக்கியமானவை இணைய ஊடகங்கள்) தான் இதுவரை படித்த உலக அரசியல், உள்ளூர் அரசியல் செய்திகள் என எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்து விட்டுக் கொண்டிருக்கின்றனர்.இப்படித்தான் அன்டார்டிக்காவின் பக்கத்தில் இருக்கும் ஒர் தீவின் அதிபர் இறந்து போன போது, என்று மெண்பொருள் துறையில் வேலை பார்க்கும் மது(இவனுடைய இயற்பெயர் மதன். இப்பொழுது சுருக்கி அது மதுவாகியிருக்கிறது) ஆரம்பிக்கும் போது, நான் ஒரு முழ கயிறை தேட வேண்டியிருக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நாட்டை காந்தியும் யேசுவும் ஆண்டது போலவும், இப்பொழுது இந்த அம்மையாரால் தான் குடி முழுகிப் போக போவது போலவும் நமது புரட்சியாளர்கள் எல்லாம் கொக்கரிக்கிறார்கள். முழுகிப் போன குடி இன்னும் கொஞ்சம் ஆழமாக முழுகப் போகிறது. ஆனால் முழுகினது என்னவோ முழுகினதுதான்.

5000 ரூபாய் சம்பளத்துக்கு நாம் வேலைக்கு எடுக்கும் ஒரு வீட்டுப் பணியாளைக் கூட, முன்புலம் பின்புலம் எல்லாம் தெரிந்து வேலைக்குச் சேர்க்கும் நாம், நம்முடைய சட்டமன்ற தொகுதி வேட்பாளரை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறோம். அவரைப் பற்றி நமக்கு என்ன தெரிகிறது. சென்னை மாநகரத்தின் பிரதான வீதிகளில், உலகம் வியக்க ஒரு திருமணத்தை நடத்தி, நகைகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்களாய் வலம் வந்தவர்களில் ஒருவரை மன்னித்து விட்டு இன்னொருவரை மன்னிக்காதது ஏன்?சென்னையையே புரட்டிப் போட்ட வெள்ளத்தின் போது ஸ்டிக்கர் ஒட்றாங்க, ஸ்டிக்கர் ஒட்றாங்க என்று கூப்பாடு போட்டு விட்டு அப்புறமாக ஓட்டையும் போட்டு விட்டு, இப்போது குத்துதே குடையுதே என்றால்,இது வேலியில் போன ஓனானை எடுத்து வேட்டிக்குள் இல்லை, வீட்டுக்குள் விட்ட கதை.

அட..சென்னைக்கு வெளியே உள்ள மக்கள் தானே ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தார்கள் என்று பேசும் சென்னை கணவாண்களே…தமிழ் நாட்டிலேயே குறைந்த ஓட்டுக்கள் பதிவானது சென்னையில் தான். எல்லோரும் அம்மா உணவகத்தில் இட்லி மாவு அரைத்துக் கொண்டிருந்தீர்களோ என்னவோ. சென்னைக்கு வெளியே உள்ள மற்ற கணவாண்கள் இன்னும் ஒரு படி மேலே. ஊரே பற்றி எரிந்தாலும் பரவாயில்லை, தனக்கு பிடில் வாசிக்க 200 ரூபாய் போதும் என்று ஓட்டை விற்று விட்டு இன்று நியாயம் பேசுகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக எந்த ஒரு ஆட்சியும் ஆறுகளைக் காப்பாற்றவில்லை..விவசாயத்தில் அக்கறை காட்டவில்லை..கல்வியை அரசுடமையாக்கவில்லை..வாழ்வாதாரத்தைப் பெருக்கவில்லை. இதையெல்லாம் யோசிக்காமல், ஓட்டை மட்டும் மாறி மாறி விற்று விட்டு, இன்றைக்குப் புரட்சி போராட்டம் என்றெல்லாம் வேதாந்தம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

நமது தலைவன் நம்மிலிருந்து தான் உருவாகிறான். அவன் இந்த சமூகத்திற்கு வெளியிலிருந்து வருவதில்லை. மனிதர்கள் தனது சுயநல தேவைகளுக்காக ஒரு தலைவனை உருவாக்குகிறார்கள். அவன் அந்த சமூகத்தின் பொதுப்படையான தன்மைகளையும் குணங்களையும் கொண்டே வளருகிறான். அவன் சொர்க்கத்தில் இருந்து நேரே வருவதில்லை. மக்கள் வழியிலேயே இன்று தலைவனும் இருக்கிறான்.மக்களால் நான், மக்களுக்காக நான் என்பதிலேயே அதன் முழு அர்த்தமும் இருக்கிறது. மக்களாகிய நானும், நீங்களும் தன்னளவில் மாறாமல், இங்கு எதுவும் மாறாது.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனிமனித பொறுப்பும் சமூக பொறுப்பும் இருக்கிறது. ஆனால் நம்மால் சமூகத்தைப் பற்றி சிந்திக்க முடியுமா, நான் என்ற எண்ணத்திலிருந்து வெளியே வர முடியுமா என்பது சந்தேகமே. சமூக கட்டமைப்பு என்பதே அரசியல், மத காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு போலியான தத்துவமோ என்ற ஐயம் எழத்தான் செய்கிறது. தன்னுணர்வு மிகவும் அதிகமாகி விட்ட இந்த சமூக ஊடக காலங்களில், சமூகம் என்ற அமைப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்குப் பிறகு இந்த சமூகத்திற்கான தலைவனையோ தலைவியையோ தேர்வு செய்யலாம்.