அலைகளாய் உடையும் கனவுகள்

தன் சுய பிம்பத்தை
நீரில் பார்த்து
கொத்துகிறது பறவை

அலைகளாய் சிதறிச் செல்லும்
பிம்பங்கள்
மறுபடியும் கூடுகின்றன

இரவு வரை
கொத்திக் கொண்டேயிருக்கும்
பறவை
பிம்பத்தை அழித்து விட்ட
களிப்பில் பறந்து செல்கிறது

அதற்குப் புரியவில்லை
பிம்பத்தை அழித்தது இருள் என்று

அதற்குப் புரிவதேயில்லை
பிம்பத்தை அழித்தது இருள் என்று

நானும்
பறவையைப் போல
உடைத்துக் கொண்டே இருக்கிறேன்

என் வாழ்வின் கனவுகளை

அலை அலையாய்
உடைந்து செல்லும் கனவுகள்
என் மரணம் வரையில்
கூடிக் கொண்டே இருக்கின்றன

வாழ்வின் அதிக நேரங்களை
கனவுகளை சிதைப்பதிலேயே
கரைத்து விடுகிறேன்

பின்
இருளில் கரைந்து விடுகிறேன்

2 comments

Leave a comment