கருஞ்சுவர்


மேட்டுப்பாளையத்தில் பட்டியிலின மக்கள் வாழும் காலனியை தான் வாழும் இடத்தில் இருந்து பிரிப்பதற்காக, அதே ஊரை நேர்ந்த ஒருவர் எழுப்பியிருந்த 20 அடி கருஞ்சுவர் பெருமழையில் சரிந்து 17 பேர் இறந்திருக்கின்றனர். இவர்கள் பட்டியிலின மக்களாக இல்லாத பட்சத்தில், இது வெறும் விபத்தாக கருதப்பட்டிருக்கும்.  ஆனால், இப்பொழுது இது மேட்டிமைக் குடியின் அரசியல் அதிகார திமிராக கருதப்பட வேண்டியுள்ளது. ஏனென்றால், இந்த 20 அடி சுவர், அடிப்படை பொறியியல் விதிகளை மீறி கட்டப்பட்டு, அதற்கு நகராட்சி நிர்வாகமும் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த 17 பேரின் மரணமும் தமிழக ஊடகங்களாலும் மக்களாலும் விவாதிக்கப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் அடங்கிப் போகும். நிரந்தர தீர்வுகளை நோக்கி நாம் எப்பொழுதும் நகர்வதில்லை. உண்மையில் நாம் நகர்த்தப்படுவதில்லை. பாலியில் , பெண்ணிய அறம், சாதி என இவை எல்லாவற்றையும் நாம் மிக மிக அடிப்படை அளவிலேயே புரிந்து வைத்திருக்கிறோம். நமது பள்ளிக் கல்வி, நம்மை மேம்பட்ட எந்திரமாக மாற்றுகிறதே தவிர, நம்மை மேம்பட்ட வாழ்வுக்கு தயார் செய்வதில்லை.நம்மில் பெரும்பாலானோருக்கு கல்வி புத்தகத்தை தாண்டி வாசிக்கும் பழக்கமே இல்லை. இருத்தலியல் துன்பங்களையோ, வாழ்வின் அழகியலையோ சார்த்தர், நீட்சே, காப்கா, காம்யூ, தாஸ்தவ்யெஸ்கி, கசான்சாகி, பாரதி, காளிதாசன் மூலம் அறிந்து கொண்டால் நம்முடைய அடிப்படை அறிவு மேம்பட்டு, வாழ்வின் தரிசனம் கிடைக்கும். ஆனால் நமது வாசிப்பு Facebook, WhatsApp – உடன் நின்று விடுகிறது. பொருளதார, புற வாழ்வு மேம்பாடு ஆசைகளாலேயே உந்தப்பட்டு வாழ்கின்ற நுகர்வு சமூகமாக மாறி விட்டிருக்கிறோம். இன்றைக்கு இந்த சமூகம், ஒரு மிகப்பெரிய நுகர்வு சந்தை. பெரு முதலாளிகளும், அரசியல்வாதிகளும் பொருட்களையும், அதிகாரத்தையும், சட்டத்தையும் நம்மிடம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம், நாமும் களிக்க களிக்க அனுபவித்து விட்டு, நம்முடைய இரகசிய ஆசைகளை குழந்தைகளை புணர்வதன் மூலமும், பாலியல் வண்கொடுமைகள் மூலமும், சாதிய அடக்குமுறைகள் மூலமும் நிறைவேற்றி கொள்கிறோம்.

இவ்வாறு அடிப்படை புரிதல்களோடு மட்டுமே வாழும் பெரும்பான்மையான மக்களை கொண்ட ஒரு சமூகம் தம்மை ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கும் ஆட்சியாளர்களை சாதிய அடிப்படையிலும், அவர்கள் வாக்குக்கு தரும் பணத்துக்காகவும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறது. அரசியல் என்பது, நிர்வாக கலை மற்றும் அறிவியல் என்ற அரிஸ்டாட்டிலின் விளக்கம் மாறி, அது வெறும் கமிஷன் மற்றும் பெருவாரியான சாதிக்கான அதிகார ஆசையாகவும் மாறி விட்டது. ஒரு அரசனுக்கு கலை  இலக்கிய புரிதல்களும், தத்துவப் பார்வையும்,பண்பாடு சமூக வரலாறு அறிதல்களும்,  நிர்வாக திறனும், தொலை நோக்கு சிந்தனையும் அடிப்படை குணங்கள். இவற்றில் ஒன்று கூட இல்லாதவர்கள் தான் இன்றைக்கு நமது ஆட்சியாளர்கள். இவர்கள் ஆட்சியில் எழுதப்படும் கல்வி கொள்கைகளும்,சாதிய சட்டங்களும், சமூக பாதுகாப்பும் ஒரு குரங்கின் கையில் கிடைத்த பூமாலைதான்.

நம்மை நாம் மாற்றிக் கொள்ளும் வரை, புற தேடல்களை தாண்டி அக தேடல்களை நோக்கி நாம் நகராத வரை, நம்முடைய ஆன்மீக புரிதல்களோ, வாழ்வின் தரிசனங்களோ நமக்கு விளங்கப் போவதுமில்லை. இந்த சமூகம் மேம்படப் போவதுமில்லை. சக மனிதனை மனிதனாகப் பார்க்காமல், ஒரு கல்சுவரை எழுப்பி அவனை தனது பார்வையில் இருந்து மறைத்து வைக்கும் ஒருவன் பொருளாதார ரீதியாக எவ்வளவு உயரத்தில் இருந்தால் தான் என்ன? தன்னோடு படிக்கும் சக மாணவியை பாலியல் வண்கொடுமை செய்து அதனை படம் பிடித்து வைத்து மிரட்டும் ஒரு இளைஞன் எவருடைய மகனாக இருந்தால் தான் என்ன? இவர்கள் எல்லம் அடிப்படையான மனிதத்தன்மையை இழந்தவர்கள். இவர்களுடைய சாதி, அரசியல் அதிகாரம் எல்லாம் தோற்று, உடல் கலைந்து இவர்களுடைய ஆன்மா நிற்கும் ஒரு நாளில் உணர்வார்கள் தங்களுடைய தவறுகளை. 

இந்த கருங்கல் சுவர் ஒரு அறியாமையின், திமிரின் குறியீடு.. இது நம் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கிறது.அது சரிந்து விழும் பொழுதில் படைப்பின் மகத்துவம் புரியும். நம்முடைய அடுத்த தலைமுறையை மனிதத்துக்கு அறிமுகப்படுத்துவது நமது கடமை. இன்றைய கல்வி சூழல் அவர்களை வெறும் போட்டியாளர்களாகவே மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த கல்வி அவ்வாறே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவர்களை மீட்டெடுப்பதிலிருந்து நம்முடைய மாற்றம் தொடங்கட்டும். நல்ல இலக்கிய, தத்துவ புத்தகங்களை அவர்களை வாசிக்கப் பழக்குவோம்.  ஜே கே, ஓஷோ, தாகூர், பாரதி என நம்முன் விரிந்து கிடக்கும் கடலின் ஒரு துளியையேனும் அவர்கள் சுவைக்கட்டும். தேசத்திற்காக அல்ல, மனிதத்திற்காக அவர்கள் சிந்தனை விரியட்டும். பெண்கள் மதிக்கப்படட்டும். மனிதன் மனிதனாய் வாழட்டும்.கருஞ்சுவர்கள் சரியட்டும்.

Leave a comment