நேர்மறை வாழ்க்கை – Positive Life

ஒரு அமைதியான குளத்தின் மேற்பரப்பை சலனப்படுத்த ஒரு சிறிய கல் போதுமானது. அலை அலையாய் பரவும் சலனங்களில் அந்த நீர் நிலையில் வாழும் அத்தனை உயிர்களும் பதறி எழும். ஒரு சீரான, அமைதியான வாழ்வியக்கம் சில கணங்களேனும் தடம் மாறும். ஆனால் இயற்கையின் பேராற்றலால், இந்த சலனங்கள் உடனே அடங்கி வாழ்வின் இயல்பு நிலை திரும்புகிறது.

நம் மனதின் ஆற்றலும் இந்த நீர் நிலையை போலவே சலனம் கொள்ளும் தருணங்களில், நம் வாழ்க்கையின், ஆற்றலின் இயல்பான ஓட்டமும் தடம் மாறுகிறது. ஆனால் அந்த நீர் நிலையின் இயல்பை போல, நம் வாழ்வின் இயல்பு நிலை திரும்புவதில்லை. இந்த சலனங்கள் பல்கி பெருகி, எண்ணங்களாக, கருத்துகளாக, நினைவுகளாக வடிவங்கள் கொண்டு நம் வாழ்க்கையை நிரந்தரமாக தடம் மாற்றுகின்றன.

சமூக ஊடகங்கள், மனித குல வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு ஒவ்வொரு தனி மனிதனும் தன் கருத்தை மிக சுதந்திரமாக வெளிப்படுத்த ஒரு மிகப்பெரிய வெளியை உருவாக்கி தந்திருக்கின்றன.இதுவே மனித குலத்திற்கு ஒரு பேராபத்தாக உருவெடுத்து நிற்கிறது. சமூக ஊடகங்கள் நாம் நமது கருத்துகளை வெளிப்படுத்தும் கருவி என்பதிலிருந்து பரிணமித்து, அவை நமது எண்ணங்களை, கருத்துகளை உருவாக்க ஆரம்பித்திருக்கின்றன.சமூகத்தின் கூட்டு உணர்வுகளை அவை உருவாக்க ஆரம்பித்திருக்கின்றன. அரசியல் சார்ந்து, கலை இலக்கியம் சார்ந்து, அறிவியல் சார்ந்து, மதம் சார்ந்து சமூக ஊடகங்கள் இன்று உருவாக்கும் இந்த கூட்டு உணர்வுகள், மிக பெரும்பாலும் எதிர்மறை எண்ணங்களாகவும், வெறுப்பு உணர்வுகளின் மேல் கட்டமைக்கப்பட்ட கருத்துகளாகவும் இருப்பது மனித குலத்திற்கே பேராபத்தாக மாறிக் கொண்டிருக்கிறது. வெறும் பொழுது போக்கு ஊடகமாக இருந்தவை, இப்பொழுது நமது எண்ணங்களை, நமது வாழ்வியல் முறைகளை தீர்மாணம் செய்பவையாக இருக்கின்றன. நம்மை அறியாமலேயே நம்மை அவை ஆட்கொண்டு விட்டன.

கருத்து பரிமாற்றம் என்பது பெரும்பாலும் தனி மனித தாக்குதல்களாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஏதேனும் ஒரு அரசியல் கருத்தையோ, மதத்தின் கோட்பாடுகளையோ பற்றிக் கொண்டு அதன் வழியாகவே உலகத்தை பார்ப்பது எப்பொழுதும் உண்மையை காண உதவாது. ஏனெனில், உண்மை என்பதற்கு எப்பொழுதும் ஒரு பக்கம் மட்டுமே இருப்பதில்லை. அது பல பரிமாணங்கள் கொண்டது. நாம் அதனை புரிந்து கொள்ளும் தோறும் மாறக் கூடியது. அதனால் எப்பொழுதும் ஒரே கருத்தையே பற்றிக் கொண்டது வாதிடுவது, நம்மை மேலும் மேலும் அறியாமைக்கே இட்டு செல்கிறது. ஆனால் நாம் அவ்வாறு சிந்திக்கவே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். நமது கல்வி முறையும், மதங்களும் அவ்வாறு இந்த உலகத்தை காணவே நம்மை பயிற்சி செய்திருக்கின்றன.

இந்த இருண்ட பக்கத்திலிருந்து, எதிர்மறை சிந்தனைகளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதே நாம் நம்மை மேம்படுத்திக் கொள்வதற்கான, ஒரு நிறைவான மகிழ்ச்சியை நோக்கி பயணிப்பதற்கான ஆரம்பம்.எதிர்மறை சிந்தனைகளை நாம் கூர்ந்து நோக்காமல் அவற்றை தாண்டி வர முடியாது. அவற்றின் ஊற்றுமுகத்தை ஆராய்வது மிக அவசியம். உலகின் பெருமதங்கள் அவற்றின் மீதே கட்டப்பட்டுள்ளன. அவற்றை எதிர்த்து உருவாகி வந்த எதிர் சிந்தனைகளான கம்யூனிஸம், மார்க்ஸிசம் போன்ற அரசியல் சிந்தாந்தங்களும் இந்த மதங்களுக்கான எதிர்வினையே.

நேர்மறை எண்ணங்களோடு வாழ பழகுவது இன்றைய கால சூழலில் சிறிது கடினமெனினும், நம்மை சுற்றியுள்ள நேர்மறை எண்ணங்களை நாம் தேடி கண்டடைந்தால், அவ்வாறு வாழும் மனிதர்களை, அவர்களது வாழ்வின் கூறுகளை நாம் புரிந்து கொண்டால் இது சாத்தியமே.

அந்த வகையில் Tristan Harris -ன் https://www.humanetech.com/ ஒரு சரியான முன்னெடுப்பு. சமூக ஊடகங்களிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள மிக சரியான ஒரு முன்னெடுப்பாக இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது.

இதனை தாண்டி, காந்தி என்ற ஒற்றை மனிதர் ஒரு பிரம்மாண்டமான புள்ளி. அரசியல், மதம், சமூகம் என நமது சிந்தனைகளை புரிந்து கொள்ள, இந்த அசாத்தியமான மனிதரின் வாழ்க்கை ஒரு மகத்தான ஆன்ம விடுதலைக்கான சாவி.

தன்னறம் நூல்வெளியின் அச்சில் வெளிவந்திருக்கும் தத்துவத்தில் கணிதல், நித்ய சைதன்ய யதியின் பல்வேறு உரைகளின் தொகுப்பு. கல்லெழும் விதை என்ற அந்த புத்தகத்தின் வெளியீட்டு நிகழவின் காணொலி இது. எதிர்மறை எண்ணங்கள் பல்கி பெருகி பேருரு கொண்டு வளர்ந்து நிற்கும் சூழலில், நேர்மறை எண்ணங்களால் நமது வாழ்வை நிறைவு செய்து கொள்ள நித்ய சைதன்ய யதியின் இந்த உரையாடல்கள் மிக முக்கியமானவை.

நம்மை சுற்றி நேர்மறை எண்ணங்களும், சிந்தனைகளும், வாழ்வியலும் பரந்து விரிந்து கிடக்கின்றன. அவற்றை உணர்ந்து, நேர்மறை எண்ணங்களால் நமது வாழ்வை நிறைவு செய்வோம்.

Leave a comment