உடுமலை சங்கர்

அதிகார கொலைகள்

உடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பையொட்டியும், சாத்தான்குளம் சிறை இரட்டை மரணங்களையொட்டியும் மைய ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பல தளங்களில் விவாதங்களும், கருத்து பகிர்தலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முன்னதில் தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் மக்களுக்குள்ளேயே வாத பிரதிவாதிகள். பின்னதில் மக்களுக்குள்ளே பிரிவினை இல்லாத ஒற்றை கருத்து. அதிகாரத்திற்கு எதிரான ஒற்றைக் கோபம். ஆனால் இவை இரண்டும் வெவ்வேறு பிரச்சனைகள் அல்ல. நான் எப்பொழுதுமே சொல்லி வந்திருக்கிறேன், ஒரு சமூகத்தின் நிகழ்வென்பது, அந்த சமூகத்தின் பொது மன நிலை வெளிப்பாடே. இங்கு நடைபெறும் நிகழ்வுகளை நம்மிலிருந்து விலக்கி நாம் அவதானிப்பது, ஒரு வகையில் அறப்பிழையே.

இந்த இரண்டு நிகழ்வுகளுக்குமான ஒற்றை சரடு, அதிகாரம். நம்முடைய சமூகம் எப்பொழுதுமே படி நிலைகளை வெவ்வேறு வடிவங்களில் உருவாக்கி கொண்டே வந்திருக்கிறது.நாம் படி நிலைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. சமூக சமத்துவம், சமூக நீதி என்பதெல்லாம் இங்கு அதிராமும், பொருளும் கொண்டவர்களுக்கே கொடுக்கப்படுகிறது.

நம்முடைய அடிப்படை மன நிலை துதி பாடும் மன நிலை. புறநானூறின் பல பாடல்கள் வெறும் போற்றிப் பாடல்களே. புரவலர்கள் பொருள் வேண்டி, தம்முடைய அரசனை களிறென்றும், வேங்கையென்றும், மழையென்றும் இன்னும் நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவில் துதி பாடி பரிசு பெறுகின்றனர். உலகில் வேறெங்கும் இந்த துதி இலக்கியம் இருந்ததா என தெரியவில்லை. இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகள் தொடங்கி நாம் இன்னொரு மனிதனை, அதுவும் அதிகாரத்தில் இருக்கும் மனிதனை துதி பாடும் கலையில் தேர்ந்து கொண்டே இருக்கிறோம். முற்போக்கு சிந்தனைகளை வளர்த்தெடுத்த பெருமையை கோரும் திராவிட இயக்கங்கள் கூட ஆட்சியாளர்களை, அதிகார வர்க்கத்தை புகழ்ந்து துதி பாடும் வழக்கத்தை மாற்றவில்லை.அது ஒரு படி மேலே சென்று, இந்த வழக்கத்தை உறுதி தான் செய்தது. சாமானியர்கள், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் என்ற மூன்று படி நிலையை கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான திராவிட ஆட்சி மக்களின் மனதில் விதைத்து, நீர் ஊற்றி வளர்த்தெடுத்திருக்கிறது. இன்று ஒரு சாமானியனின் புகார் காவல் நிலையங்களில் குறைந்த பட்சம் ஒரு கவுன்சிலரின் சிபாரிசின்றி சரியாக விசாரிக்கப்படாது. கண்ணறிந்து கொலை செய்தவனாகினும், அவன் அரசியல் அதிகாரம் பெற்றவனாகி விட்டால், நம் வீட்டு திருமணத்திற்கு வரவேற்பு தட்டிகள் வைத்து அவனை வரவேற்று உபசரிப்பது நம் வழக்கம்.

நம் சமூகத்தின் படி நிலைகள் சாதியாலும், அதிகாரத்தாலும், பொருள் வசதி நிலையாலும், பாலியலாலும் கட்டப்பட்டது. உயர்ந்த சாதி-தாழ்ந்த சாதி, சாமானியன்-அரசு அதிகாரி, ஏழை-பணக்காரன், ஆண்-பெண் என எப்போதும் எதிரெதிர் துருவங்களை கொண்டே நம் சமுகத்தை நாம் உருவாக்குகிறோம்.இவையெல்லாம் நாம் அன்றாட வாழ்வில் நம்மை பொருத்திக் கொள்ளும் அடையாளங்கள். சில இடங்களில் நாம் அடக்கும் நிலையில் இருப்போம். சில இடங்களில் நாம் அடங்கும் நிலையில் இருப்போம். உண்மையில் அடக்குதலை நாம் இரகசியமாக, மனதின் ஆழத்தில் ரசிக்கிறோம்.

இங்கு 3000-க்கும் மேற்பட்ட சாதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு சாதியும் இன்னொரு சாதிக்கு மேலும், மற்றுமொரு சாதிக்கு கீழும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு ஏணியின் படிகளைப் போல. நாம் எல்லோரும் ஏதோவொரு தருணத்தில் நம் சாதியின் மேன்மைகளை ரசிக்கிறோம். ரகசியமாகவும், வெளிப்படையாகவும்.நம் கீழுள்ள சாதியை ஏளனமாக பார்க்கிறோம். நமக்கு மேலுள்ளவர்களால் அவ்வாறு பார்க்கப்படுகிறோம். அதிகார படி நிலைகளும் அவ்வாறே. உணவு சங்கிலி போல. சாதி சங்கிலியும், அதிகார சங்கிலியும் நாம் வெளிப்படையாக நம்மை நோக்கி விசாரிக்க வேண்டிய ஒன்று. பிராமண எதிர்ப்பும், அரசியல் அதிகார வெறுப்பும் நாம் தப்பித்துக் கொள்ள பயன்படுத்தும் காரணங்கள்.

ஆராய்ந்து நோக்கினால்,நடு நிலை சாதிகளே தாழ்ந்த சாதிகள் மேல் வெளிப்படையாக கட்டற்ற வன்முறைகளை நிகழ்த்துகின்றன. பல கோடி மக்கள் வாழும் இந்த தேசத்தில், அரசு அதிகாரியாக, அரசியல்வாதியாக ஒருவன் உயரும் இடத்திலிருந்து பார்க்கும் போது, அவனை சார்ந்திருக்கும் மக்கள் ஏராளம். இயல்பாகவே அவனது மனம், தன்னை ஒரு கடவுளின் தூதனாக பாவிக்கிறது. ஒரு அதிகார தோரணை வெளிப்படுகிறது. அரை நூற்றாண்டு முற்போக்கு திராவிட அரசியல், தெருவின் பெயர்களிலும், நம்முடைய பெயரின் பின் பாதியிலிருந்தும் தான் சாதியை ஒழித்ததே தவிர, நம்முடைய மனதிலிருந்து அல்ல. ஓட்டு அரசியல் என்பதே சாதி அரசியலின் மற்றொரு பரிமாணம் தான்.

நாம் நம்மை மாற்றிக் கொண்டாலொழிய, சாமானியர்கள் மீது நிகழ்த்தப்படும் சாத்தான்குளம் அதிகார வன்முறைகளும், சாதிய கொலைகள் செய்து விட்டு நிரபராதியாக நீதிமன்றங்களை விட்டு வெளியே வரும் தீர்ப்புகளும் தினமும் இந்த சமூகத்தில் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும், வெளிப்படையாகவேனும் அல்லது இரகசியமாகவேனும்.